கேரள அரசு பஸ்சில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்
கூடலுார் ; கர்நாடகாவில் இருந்து கேரள அரசு பஸ்சில் கூடலுாருக்கு, கடத்த முயன்ற, 83 பண்டல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.கர்நாடகாவில் இருந்து, இரவு நேரங்களில் அரசு பஸ்களில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, நீலகிரிக்கு கடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் டி.எஸ்.பி., உத்தரவுப்படி தமிழக -கர்நாடக எல்லையான, கக்கனல்லா சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு, எஸ்.ஐ., கபில்தேவ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருச்சூர் செல்லும் கேரளா அரசு பஸ்சை போலீசார் சோதனை மேற்கொண்ட போது, பஸ்சில் பின் இருக்கை பகுதியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பதுக்கி கடத்தி வருவது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, கூடலுார் ஒட்டுவயல் பகுதியை சேர்ந்த அன்சர் அலி, 32, என்பவரை கைது செய்தனர். மேல் விசாரணைக்காக மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ., பிரபாகர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் மற்றும் மதிப்பு, 71 ஆயிரம் ரூபாய் ஆகும்.