உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இன்று என்.எம்.ஆர்., தின கொண்டாட்டம்; எக்ஸ் கிளாஸ் இன்ஜின்கள் இயக்கினால் மகிழ்ச்சி

இன்று என்.எம்.ஆர்., தின கொண்டாட்டம்; எக்ஸ் கிளாஸ் இன்ஜின்கள் இயக்கினால் மகிழ்ச்சி

குன்னுார் : ஊட்டி ரயில் நிலையத்தில், இன்று என்.எம்.ஆர்., தினம் கொண்டாடும் சூழ்நிலையில், 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின்களை கொண்டு, குன்னுார் -ஊட்டி இடையே மலை ரயில்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899 ஜூன் 15 முதல், மேட்டுப்பாளையம்- குன்னுார் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக்., 15 முதல், ஊட்டி ரயில் நிலையம் வரை, ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதால், இந்த தினத்தில், ஆண்டுதோறும் நீலகிரி மலை ரயில் (என்.எம்.ஆர்.,) தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி, இன்று ஊட்டி ரயில் நிலையத்தில், மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் என்.எம்.ஆர்., தினம் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டும் நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தி பொலிவு படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

வீணாக நிறுத்தப்பட்ட இன்ஜின்

ஏற்கனவே, ரூ.10 கோடி மதிப்பில் நமது நாட்டு உற்பத்தி பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட முதல் நிலக்கரி நீராவி இன்ஜின், மேட்டுப்பாளையத்தில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளின் அலட்சியத்தால் பயனின்றி நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த, 1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வடிவமைத்து, 1918ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்த 'எக்ஸ் கிளாஸ்-37384' நிலக்கரி இன்ஜினும் இயங்கும் நிலையில் இருந்தும் பயனில்லாமல் மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மலை ரத பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,''யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்துள்ள, நீலகிரி மலை ரயிலின் எக்ஸ் கிளாஸ் இன்ஜின்கள், இது போன்ற விழாக்களில் முன்பு இயக்கப்பட்ட போது, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 'நிலக்கரி; டீசல்' என, அமைக்கப்பட்ட இரு எக்ஸ் கிளாஸ் இன்ஜின்களும் ஊட்டி வரை இயக்கினால் பயணிகள் மகிழ்ச்சி அடைவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை