சுற்றுலா பயணியரின் வருகை அதிகரிப்பு; விரைவில் சுற்று பேருந்துகள் இயக்க திட்டம்
ஊட்டி; ஊட்டிக்கு சுற்றுலா பயணியரின் வருகை அதிகரிப்பால் அரசு பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து உள்ளூர் , வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திற்கு தினமும், 180 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இ--பாஸ் திட்டம் ஜூன், 30ம் தேதி வரை தொடரும். அதில், வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 6000 சுற்றுலா வாகனங்கள் மற்றும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 8000 சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலா வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் வரும் சுற்றுலா பயணியரின் வருகையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகம் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணியரின் வருகையை கருத்தில் கொண்டு விரைவில் சுற்று பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.