தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள்
ஊட்டி ; ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழை காரணமாக, கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூக்களை பார்வையிட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.இரண்டாவது சீசன் நடந்து வரும் நிலையில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும், சமவெளி பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு முதல், ஊட்டியில் கன மழை பெய்த நிலையில், நேற்று காலையிலும் மழை நீடித்தது. இந்த மழையில், தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், நனையாமல் இருக்க கண்ணாடி மாளிகையில் தஞ்சம் அடைந்தனர். அங்கு இருந்தபடி, மாடங்களில் அடுக்கி வைத்த மலர் தொட்டிகளை ரசித்த வண்ணம், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.