பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர் இதமான கால நிலையில் குதுாகலம்
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இதமான காலநிலையை ரசிக்க சுற்றுலா பயணியர் திரண்டனர். ஊட்டியில் கோடை சீசன் துவங்கியதை அடுத்து, சுற்றுலா பயணியரின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா பயணியரின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு மலர் கண்காட்சி மே, 16ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சிக்காக, 62 மலர் வகைகளில் , 262 ரகங்களைக் கொண்ட, 60 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட ரகங்களின் மலர் செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில், 15 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ண மலர்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தொட்டிகளில் காணப்படும் பிகோனிய மலர்கள் சுற்றுலா பயணிகளை வசீகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், இதன் அருகே நின்று செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர். ஆங்காங்கே புல்தரை மைதானத்தில் அமர்ந்து ஓய்வெடுத்து சென்றனர்.