குடை பிடித்தவாறு லாரியின் மேல் அமர்ந்து பயணம்; கவனம் தவறினால் அசம்பாவிதம் நடக்கும் அபாயம்
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் கேரட் ஏற்றிய லோடு லாரியின் மேல், குடை பிடித்தவாறு பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், உருளை கிழங்கிற்கு அடுத்தபடியாக, கேரட் உற்பத்தி அதிகளவில் உள்ளது. தற்போது, பல இடங்களில் கேரட் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தோட்டத்தில் இருந்து, அறுவடை செய்யப்படும் கேரட் லாரிகளில் மூட்டையாக ஏற்றி, தரம் பிரித்து கழுவுவதற்காக, நீர் ஆதாரம் உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் லாரிகளின் மேல், தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அமர்ந்து செல்வது தொடர்கிறது. அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையில் குடைப்பிடித்தவாறு ஆபத்தை உணராமல் மூட்டைகளின் மேல் அமர்ந்து பயணம் மேற்கொள்கின்றனர். மலை பாதையில் லாரி வளைவுகளில் திரும்பும் போதும், செங்குத்தான சாலையில் செல்லும் போதும் தொழிலாளர்கள் விழுந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில், இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தொழிலாளர்கள் மேற்கொள்ளாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக் கை எடுப்பது அவசியம்.