குடியிருப்பு மீது விழந்த மரம்:மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி: ஊட்டி- மஞ்சூர் பிரதான சாலை, கொல்லிமலை சந்திப்பில் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி - மஞ்சூர் சாலையில் கொல்லிமலை சந்திப்பில், 10க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பை ஒட்டிய சாலையோரத்தில் ஏராளமான பெரிய அளவிலான கற்பூர மரங்கள் உள்ளன. இங்குள்ள அபாயகரமான மரத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட துறையினருக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 8:30 மணியளவில் கற்பூர மரம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்தது. மரக்கிளை பட்டதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது. ‘ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அபாயகரமான மரங்களை உடனே அகற்ற வேண்டும்,’ என, வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து தடைபட்டதால் இருப்புறம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்பவ பகுதிக்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்நது, வனத்துறை, தீயணைப்பு துறையினர் ‘பவர்ஷா’ உதவியுடன், சாலையோரத்தில் இருந்த, 5 மரங்களை அகற்றிய பின், மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.