உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியின பெண் மரணம்; கணவரிடம் தீவிர விசாரணை

பழங்குடியின பெண் மரணம்; கணவரிடம் தீவிர விசாரணை

பந்தலுார்; நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணன் -கல்யாணி தம்பதி. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொத்தலகுண்டு என்ற இடத்தில் மணி என்பவருக்கு சொந்தமான இடத்தில், தைலம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள அறையில் தங்கி பணி செய்து வரும் இருவரும், நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளனர். வீட்டிற்கு வெளியே படுத்திருந்த நிலையில், நேற்று காலை கல்யாணி,48, உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, டி.எஸ்.பி., ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் பிரிவு இணை இயக்குனர் ரமேஷ், கைரேகை நிபுணர் எம்.ரமேஷ் தலைமையிலான குழுவினர் மற்றும் மோப்ப நாய் மோட்சா உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மோப்பநாய் சாலை மற்றும் குடியிருப்பை ஒட்டிய ஆற்றில் ஓடி சென்று பின்னர் குடியிருப்பு அருகில் வந்து நின்றது. தொடர்ந்து, மது பாட்டில்களில் பதிந்திருந்த கைரேகைகளை போலீசார் ஆய்வு செய்து பதிவு செய்தனர்.உயிரிழந்த கல்யாணியின் கணவர் நாராயணனிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்யாணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை