உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெளிநாட்டில் பணிபுரியும் பழங்குடியின இளைஞர்; தனது கிராம இளையோர் கல்வி கற்க விழிப்புணர்வு

வெளிநாட்டில் பணிபுரியும் பழங்குடியின இளைஞர்; தனது கிராம இளையோர் கல்வி கற்க விழிப்புணர்வு

பந்தலுார்; பந்தலுார் அருகே, தஞ்சோரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி--சகுந்தலா தம்பதி.இவர்களின் மகன் அருண்,27. இவர் எட்டாம் வகுப்பு வரை பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மேல்நிலை வகுப்பை பிதர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்தார். நல்ல நிலையில் படிக்கும் இவரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த பகுதியை சேர்ந்த லிண்டோ என்பவரின் அறிவுரையின் பேரில், ஈரோடு பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்த நிலையில், கூடலூரில் செயல்பட்டு வரும் 'அக்கார்டு' அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.தொடர்ந்து, நண்பர்கள் உதவியுடன் துபாயில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்தார். இதன் மூலம், காட்டு நாயக்கர் பழங்குடியின சமுதாயத்தில் முதலில் வெளிநாடு சென்றவர் என்ற பெருமையை பெற்றார். அங்கு பல மொழிகளை கற்று சொந்த ஊருக்கு வந்த அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.அருண் கூறுகையில், ''பழங்குடியின மக்கள் பொதுவாகவே வெளி நபர்களை பார்க்கவும், பேசவும் தயங்குகின்றனர். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நான், இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்து வெளிநாடு சென்றேன். வாழ்வில் உயர்ந்து வருகிறேன். எனது சமுதாயமும் உயர வேண்டும் என்ற நோக்கில், எங்கள் சமுதாய இளையோர்களிடம், 'கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும்,' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நிச்சயம் பலரை கல்வியில் உயர்த்துவேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ