மதுக்கடையை அகற்ற வேண்டும்; பாரம்பரிய உடையுடன் வந்து பழங்குடிகள் மனு
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் பூர்வ குடிமக்களாக கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மஞ்சூர் அருகே குந்தா கோத்தகிரியில், 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தை ஒட்டி டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. இங்கு செயல்படும் மதுக்கடையால் கோத்தரின இளைஞர்கள், அப்பகுதி மக்கள் குடிக்கு அடிமையாவதால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அப்பகுதி பழங்குடி பெண்கள், ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். நிருபர்களிடம் கோத்திரின பெண்கள் கூறுகையில்,'கிராமத்தை ஒட்டி பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோத்தர் பழங்குடியின ஆண்கள் ஏராளமானோர் மதுவுக்கு அடிமையாவது தொடர்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடை உடனே அகற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,' என்றனர்.