மேலும் செய்திகள்
பசுந்தேயிலை வினியோகத்தை நிறுத்த முடிவு
04-Dec-2024
குன்னுார்; தொழில்துறை அமைச்சர், அரசு கொறடா, தொழில்துறை ஆணையர் உத்தரவிட்டும், பசுந்தேயிலைக்கு உரிய மாதாந்திர விலையை வழங்காமல், 'இன்கோ சர்வ்' அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குன்னுாரில் உள்ள இன்கோசர்வ் தலைமையில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்படுகிறது. பசுந்தேயிலை வழங்கும் விவசாயிகளுக்கு, உற்பத்தி செய்யப்படும், தேயிலை துாள் ஏலத்தின் அடிப்படையில், மாதாந்திர விலையை தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளதுடன், 'உரிய விலை வழங்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வாரியம் அறிவித்துள்ளது. உரிய விலை வழங்கவில்லை
எனினும், குந்தாவில் உள்ள, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அக்., மாத நிர்ணய விலையான கிலோவுக்கு, 24.49 ரூபாய் வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக அங்கத்தினர்களின் கோரிக்கையை ஏற்ற, தொழில்துறை அமைச்சர், அரசு கொறடா , தொழில்துறை ஆணையர் ஆகியோர், பசுந்தேயிலைக்கு உரிய மாதாந்திர விலையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். எனினும் இந்த தொகையை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். 6 முறை பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், விவசாயிகள் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்குவது நிறுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வினியோகத்தை நிறுத்த முடிவு
குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், ''தேயிலை வாரிய சட்டத்தின்படி, 2015ல் இருந்து கூட்டுறவு தொழிற்சாலைகள் உரிய விலையை வழங்குவதில்லை. அப்போது கிலோவிற்கு, 12.50 என நிர்ணயம் செய்யப்பட்டதில் 50 பைசா குறைத்துதான் வழங்கப்பட்டது. இது போன்று, 9 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய விலையை வழங்காமல், 100 கோடி ரூபாய் வரை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் உயர்ந்தபட்ச விலையான, 24.49 ரூபாய் வழங்காமல் குறைக்கப்பட்டுள்ளது. பல முறை தெரிவித்தும், தீர்வு காணாத நிலையில், இன்கோசர்வ் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்கும் வரையில், 19ல் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை, கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
04-Dec-2024