குன்னுார்: குன்னுாரில் டாஸ்மாக் மதுக்கடையில், 10 ரூபாய் கூடுதல் வசூல் செய்யும் விவகாரத்தில், விற்பனை யாளர்களை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். குன்னுார் மவுண்ட் ரோடு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் மதுகடைக்கு. நேற்று முன்தினம், மது வாங்க கேபிள் ஆப்ரேட்டராக இருந்த டான்சில்வர் ஸ்டார் வந்துள்ளார். மதுவுக்கு, 10 ரூபாய் கூடுதல் கேட்ட விவகாரத்தால், இவர் தனது மகன் ஆலன் ராபர்ட் உடன் மீண்டும் வந்து, விற்பனையாளர் பிரேம்குமாரை தாக்கிய போது அவர் காயமடைந்தார். தடுக்க வந்த சிவகுமார் என்பவரும் காயமடைந்தார். இருவரும் குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய இருவரும், விற்பனையாளர்கள் தங்களை தாக்கியதாக கூறி, குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சி களை வைத்து, வழக்கு பதிவு செய்த அப்பர் குன்னுார் போலீசார் தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று குன்னூர் வி.பி., தெருவில் சி.ஐ.டி.யு., சார்பில், நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தலைமை வகித்த டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆல்தொரை பேசுகையில், ''குன்னுாரில் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என்றார். சங்க பொருளாளர் நவீன் சந்திரன் பேசுகையில்,''டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு அரசு கூறுவதன் அடிப்படையில், 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில் திருப்பி டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கும்போது, அந்த, 10 ரூபாய் திரும்ப அவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. அரசே வசூலிக்கும் இந்த, 10 ரூபாய் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,'' என்றார்.