இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிப்பு
ஊட்டி,: ஊட்டி மருத்துமனை சாலையின் இருப்புறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி மருத்துமனை சாலை பகுதியில், அரசு தலைமை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், எஸ்.பி., ஆபீஸ், ஆர்.டி.ஓ., அலுவலகம், ஐயப்பன் கோவில் ஆகியவை உள்ளன. இச்சாலையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.ஐயப்பன் கோவிலில் இருந்து மருத்துவமனை வரை, 1 கி.மீ., துாரத்துக்கு சாலை குறுகலாக உள்ளது. இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்துவதை வாகன ஓட்டிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, அரசு மருத்துவமனைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வரும் ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் அவசர தேவைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பல்வேறு பாதிப்புகள் நேரிடுகிறது.ஓட்டுனர்கள் கூறுகையில், 'குறுகலாக உள்ள இச்சாலையில் வாகனம் நிறுத்துவதை தடுக்க அபராதம் விதிக்க வேண்டும். நோயாளிகளின் முக்கியத்துவத்தை கருதி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்,' என்றனர்.