நீலகிரியில் மின் தடையால் இருளில் மூழ்கிய கிராமங்கள்; முகாமில் தங்க வைக்கப்பட்ட பழங்குடியினர்
ஊட்டி : நீலகிரியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. நீலகிரி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. அதில், 'குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார்,' உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சி, 35 செ.மீ; அப்பர் பவானி, 29 செ.மீ; எம்ரால்டு, 18 செ.மீ; கூடலுார், 15 செ.மீ; பந்தலுார், 13 செ.மீ., மழை பதிவானது. வேரோடு சாய்ந்த 43 மரங்கள்
நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார், குன்னுார் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில், 43 மரங்கள் வேரோடு சாய்ந்தன. எம்.பாலாடா, கப்பதொரை, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில், 100 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. கூடலுார், பந்தலுாரில், 300 வாழைகள் பலத்த காற்றுக்கு சேதமானது. ஊட்டி,- மஞ்சூர், இத்தலார், எமரால்டு, பிக்கட்டி, அவலாஞ்சி சாலைகளில், 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் உதவியுடன் உடனுக்குடன் அகற்றினர். மழைக்கு, 4 வீடுகள் சேதமானது. மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் ஊட்டி, பாலகொலா, எமரால்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. ஊட்டி, லவ்டேல் உட்பட பொரும்பாலான இடங்களில் நாள் முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழையால் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குன்னுார் கேத்தி போலீஸ் ஸ்டேஷன் கட்டட கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், காற்றுடன் கன மழை பெய்ததால், யூகலிப்டஸ் மரம் ஒன்று கட்டடத்தின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் உடனே வருவாய் துறையினரை அணுகி அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.
முகாமில் தங்கிய 61 பேர்
கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் பழங்குடியினர் கிராமத்தில், 18 குடும்பத்தினர் தங்கி இருந்த வீடுகள் மழையால் பாதிக்கும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த, 57 பேரை வருவாய் துறையினர் மீட்டு, புத்துார் வயல் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்தனர். சேமுண்டி பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேரையும் அங்கு வரவழைத்தனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் உணவு உட்பட அனைத்து உதவிகள் செய்யப்பட்டன.