வனத்துறையின் தடம் பிரிவின் கீழ் கிராமங்களில் வாலிபால் போட்டி
பந்தலுார்; கூடலுார் வனக்கோட்டத்தில் வனத்துறையின், 'தடம்' பிரிவு சார்பில், கிராமங்களில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.கூடலுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில், வனவிலங்குகள் அதிக அளவில் கிராம பகுதியில் வந்து அச்சுறுத்தி வருகின்றன. அதில், குறிப்பிட்ட பகுதிகள், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில், கண்காணிப்பில் வைத்து, அந்த பகுதிகளை, 'வனத்துறையின் தடம்' எனும் பிரிவின் கீழ் கொண்டு வந்து, சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். அதில், வன விலங்கு நடமாட்டம் கிராமங்களில், 'சோலார் தெரு விளக்கு அமைப்பது; பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது; இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு திறனை மேம்படுத்துவது,' போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட, நான்கு கிராமங்களை தேர்வு செய்து அந்தப் பகுதி இளைஞர்களுக்கு, கொளப்பள்ளி குறிஞ்சி நகர் மைதானத்தில் இரண்டு நாட்கள் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. போட்டியினை வனச்சரகர் அய்யனார் துவக்கி வைத்து பேசுகையில், ''வனத்துறையினர், கிராம மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கூடலுார் வனக்கோட்டம் முழுவதும், வாலிபால் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனவர் ஆனந்த் மற்றும் வனக்காப்பாளர்கள் வன ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.