சாலை சீரமைப்பில் தன்னார்வலர்கள்
குன்னுார்: அருவங்காடு ஜெகதளா சாலையில் குழி ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், தன்னார்வலர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். குன்னுார் அருகே, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு உட்பட்ட ஆர்ச் முதல் ஜெகதளா விநாயகர் கோவில் வரையுள்ள சாலையில், தொழிற்சாலை குடியிருப்புகள் வழியாக வரும் மழை நீர் மற்றும் தொட்டியில் இருந்து வெளியேறும் நீர் கால்வாயில் செல்கிறது. சமீபத்தில் அடைப்பு ஏற்பட்டு. நீர் சாலையில் சென்றதால் குழிகள் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டதுடன், இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் தடுமாறி விழுகின்றனர். தொழிற்சாலை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகு, மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது. சாலை சீரமைக்காத நிலையில், வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், சஜீவன், பிரதீஷ் உள்ளிட்டோர் தலைமையில் தன்னார்வலர்கள் குழுவினர் தற்காலிகமாக சீரமைத்தனர்.