கோத்தகிரி நகரப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு: விலைக்கு வாங்க வேண்டிய அவலம்
கோத்தகிரி: கோத்தகிரி நகரப்பகுதிக்கு, ஈளாடா தடுப்பணையில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தடுப்பணையில் இருந்து, குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர், கேர்பெட்டா புதூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு, ராம்சந்த் பகுதியில், மெகா குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக தண்ணீர் வினியோகிக்க ஏதுவாக, 43 கோடி ரூபாய் செலவில், குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக, கடைவீதி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடும்ப தேவைகளை சமாளிக்க முடியாமல், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகம் பேர் வசிக்கும் பகுதிகளில் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதில், கடைகளுக்கான தண்ணீர், 1000 லிட்டர், 570 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி நகர மன்ற தலைவர் ஜெயகுமாரி கூறுகையில், ''கோத்தகிரி பஜார் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். அப்பகுதி கவுன்சிலர் உட்பட மக்கள் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். பகுதிக்கு அளக்கறை மற்றும் ஈளாடா நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. மழை இல்லாத காரணத்தால், தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. மோட்டார் பம்ப் பழுது காரணமாகவும், சரிவர தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. விரைவில், மோட்டார் பழுது நீக்கி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அம்ருத் திட்டத்தில், 48 கோடி ரூபாய் செலவில் நிரந்தரமாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.