உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள்

தண்ணீர்... தண்ணீர்! கண்ணீர் விடும் பெண்கள்

நீலகிரி மாவட்டத்தில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார், நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சி,11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சி,' என, இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், 2.25 லட்சம் குடும்பங்கள் உள்ளன. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தவிர,மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், 450 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கிணற்று நீரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய குடிநீர் சேமிப்புக்காக, 200 குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதில், 150 தொட்டிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. 25 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான திட்ட பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.

பராமரிக்கப்படாத தடுப்பணைகள்

கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள முக்கிய தடுப்பணைகள் அனைத்தும் பராமரிக்காமல் விட்டதால் சேறும்,சகதியும் நிறைந்து தண்ணீரை சேமிக்க முடியாத நிலையால் குடிநீர் வீணாகிறது. அவற்றை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்கப்படாததால் கோடையில் பல கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டி புறநகர் பகுதிகள், கூடலுார், பந்தலுார், கீழ்கோத்தகிரி உட்பட பல பழங்குடியினர் வசிக்கும் கிராமப்பகுதிகளில், தண்ணீருக்காக மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலையும் உள்ளது. சில உள்ளாட்சி அமைப்பினர் லாரிகளில் குடிநீர் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்தாலும் முழுமையாக தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பல கிராமங்களில் வாழும் பழங்குடியினர் மற்றும் தொழிலாளர்கள் நாள்தோறும் குடங்களுடன் கிணற்றை தேடி அலைகின்றனர் அல்லது உள்ளாட்சி அமைப்பின் குடிநீர் லாரிகளுக்காக குடங்களுடன் சாலைகளில் காத்து கிடக்கும் அவலம் தொடர்கிறது. பந்தலுார் அருகே உள்ள சில கிராமங்களில் பலர் பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், நகரப்பகுதிகளில் மட்டுமே குடிநீர் தேவைக்கான மேம்பாட்டு பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளது. புறநகர் பகுதிகள், குக்கிராமங்களில் வாழும் மக்கள் இன்னும் துாய்மை செய்யப்படாத சுகாதாரமற்ற மாசு கலந்த கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டி அவலம் தொடர்கிறது. அவர்களின் கஷ்டங்களை கண்டு கொள்ளவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு நேரமில்லை.

கூடலுார்

கூடலுார் நகராட்சி பகுதிக்கு ஓவேலி ஆத்துார் ஹெலன், பெல்மாடி, இரும்புபாலம், தொரப்பள்ளி குடிநீர் திட்டங்களில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், இரும்புபாலம், தொரப்பள்ளி குடிநீர் திட்டங்களில் மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இதற்காக மாதம், மாதம் சராசரியாக, 7 லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். எனினும், கோடை காலத்தில் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள், முறையான குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அதில், ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தேவசம்வயல், மேலம்பள்ளம் கிராம மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய, ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் மூலம், 3 ஆண்டுகளுக்கு முன் கிணறு, குடிநீர் தொட்டி, குழாய்கள் அமைத்தனர். ஆனால், மின் சப்ளை கிடைக்காததால், இதுவரை இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடங்களுடன் குடிநீருக்கு அலையும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.மேலும், நெலாக்கோட்டை அருகே உள்ள கொட்டாய்மட்டம் கிராமத்தில், குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, நீண்ட துாரம் நடந்து சென்று, சுத்திகரிக்கப்படாத கிணற்று நீரை குடத்தில் நிரப்பி நாள்தோறும் தலையில் சுமந்து வருகின்றனர். இதேபோல, பல தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள், பழங்குடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை தொடர்ந்து வருகிறது.

பந்தலுார்

பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 92 குடிநீர் கிணறுகள் அமைந்துள்ளன. இங்குள்ள குடிநீர் கிணறுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும், நீர் ஆதாரங்களில் முழுமையாக ஆய்வு செய்து, குடிநீர் சப்ளை செய்வதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.இதனால் கோடை காலம் தொடங்கினால், நகராட்சி தண்ணீர் லாரி மற்றும், இரண்டு தனியார் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், நகராட்சி லாரிக்கு டீசல் செலவு மட்டுமே ஆகும் நிலையில், தனியார் லாரிகளுக்கு மாதந்தோறும், 10 லட்சம் ரூபாய் செலவில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டு வருகிறது.

160 கிணறுகள் இருந்தும் வீண்

சேரங்கோடு ஊராட்சியில், 160க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் அமைந்துள்ளதுடன், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழும் குடிநீர் வினியோகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலை தொடர்கிறது. இதேபோல், சேரங்கோடு ஊராட்சியிலும், குடிநீர் கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை முழுமையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அக்கறை காட்டாத நிலையில், குடிநீருக்காக மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

குன்னுார்

குன்னுார் பகுதியில், பிப்., முதல் ஏப்., மாதங்களில் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேடான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தாழ்வான இடங்களில் குடிநீர் எளிதாக செல்லும் நிலையில, மிக உயரமான இடங்களில் செல்வதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்சி பொருளாக குடிநீர் ஆதாரங்கள்

சங்கீதா, சமூக ஆர்வலர், பிதர்காடு, பந்தலுார்: தமிழகத்தின் எல்லை பகுதியில் உள்ள நெல்லியாளம், சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை உள்ளாட்சி பகுதிகளில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் கவனம் செலுத்துவதை விட, கமிஷன் பெறுவதிலேயே அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முனைப்புகாட்டி வருகின்றனர். இதனால், மக்களின் அன்றாட அடிப்படை தேவையான குடிநீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு நிதிகள் மூலம் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தபட்ட போதும், அவை முழுமையாக மக்களை அடையாத நிலையில், பல குடிநீர் ஆதாரங்கள் வெறும் காட்சி பொருளாகவே மாறி வீணாகி வருகிறது.

நகர பகுதிகளில் மட்டும் மேம்பாடு

சுரேஷ், செம்பகொல்லி கிராம தலைவர், கூடலுார்: மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின கிராமங்களிலும், குடிநீர் கிணறுகள் துார்வாரி சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், மாசடைந்த குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில், பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து புகார் கூறினால் மிரட்டும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு படிக்காத ஏழை மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், எதற்கு பிரச்னை என, மாசடைந்த குடிநீர் பருகும் நிலைக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு நகரப்பகுதிகளை மட்டுமே அனைவரும் பார்க்கின்றனர். கிராம மக்களின் பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு கவலை இல்லை.

பழங்குடியினர் புறக்கணிப்பு

சந்திரன், காட்டுநாயக்கர் சமுதாய சங்க தலைவர் பந்தலுார்: மக்களுக்கு -பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஈடுபட்டுள்ள நிலையில், கிராமப்புற பகுதிகளை சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள், மெத்தனம் காட்டி வருவதால், பல அரசின் திட்டங்கள் வீணாகி வருகிறது.இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தரமான மற்றும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். மாவட்ட அதிகாரிகள் பந்தலுார், கூடலுாரில் வாழும் பழங்குடியினரை புறக்கணித்து வருகின்றனர்.

கிணறுகளை துார்வார வேண்டும்!

பிரசாந்த் ராமசாமி, மாவட்ட தலைவர், காங்., தொழிலாளர் யூனியன்: குன்னுாரில், 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரேலியா அணையில், அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 ஏக்கரில் குடிநீர் தேக்கி பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள இடத்தில் தண்ணீர் தேக்க திட்டம் செயல்படுத்த வேண்டும். இதே போல பந்துமையில், 200 ஏக்கர் பரப்பளவில் நீராதார பகுதி பாதுகாக்கப்படாமல் உள்ளது. கரன்சி தடுப்பணை மற்றும் அம்பிகாபுரம், கரடி பள்ளம் கிணறுகளை துார்வாரி நேரடியாக குடிநீர் வழங்குவதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். --நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை