170 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி நலத்திட்ட உதவி
ஊட்டி; ஊட்டியில் நடந்த விழாவில், 170 பயனாளிகளுக்கு, 6.15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஊட்டியில் நடந்த அரசு விழாவில், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா பங்கேற்று, 5.22 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்த, 19 திட்டப் பணிகளை மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அண்ணா நகர், பூபதியூர், சன்சைன் நகரில் எம்.எல்.ஏ., நிதியில், தலா 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி: நடுஹட்டி பாமுடி, காவி லோரை கிராமத்தில் தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம்; கெட்டிக்கம்பையில், 16.50 லட்சம் ரூபாய், சோலுார் மட்டத்தில், நமக்கு நாமே திட்டத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்; கோத்திமுக்கு பகுதியில், எ.எம்.டி., திட்டத்தில், 19.20 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன் வாடி மையத்தை திறந்து வைத்தார். மேலும், கூடலுார் ஊராட்சி ஒன்றியம், கோட்டாடு, அய்யன்கொல்லி, குறிஞ்சி நகர், மலவன் சேரம்பாடியில், பிக்கட்டி முள்ளிலை பகுதிகளில், 5.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 19 வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.தொடர்ந்து, மகளிர் உரிமை தொகை, பழங்குடியினர் வீடு உட்பட, பல்வேறு திட்டங்களில், 6.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 170 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் கவுசிக் உட்பட பலர் பங்கேற்றனர்.