வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில்... தடையில்லா தண்ணீர்!ரூ.1.01 கோடியில் இரண்டாம் திட்டம் துவக்கம்
குன்னுார்:வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 1.01 கோடி ரூபாய் செலவில், தடையில்லாமல், 24 மணி நேரமும் பொது குழாயில் தண்ணீர் வினியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 7 வார்டுகள் உள்ளது. 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வாரியம் சார்பில், கடந்த ஆண்டு பாபு வில்லேஜ், அண்ணா நகரில், 24 மணி நேரம் தடையில்லாத தண்ணீர் வினியோக திட்டம் துவங்கப்பட்டது. இந்த தண்ணீரை மற்ற பயன்பாடுகளுக்கு மக்கள் பயன்படுத்தினாலும், சிலர் சுத்திகரித்து குடிநீராகவும் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் திட்டம் துவக்கம்
இரண்டாம் கட்டமாக ஹவா ஹில் பகுதியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் உத்தரவின் பேரில், குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி நடந்தன.அதில், '45 லட்சம் ரூபாய் மதிப்பில், 1.25 லட்சம் லிட்டர் நீர்தேக்க தொட்டி; 37 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் நீர் தேக்க தொட்டி,' என, இரு தொட்டிகள் அமைக்கப்பட்டன. நல்லப்பன் தெரு, ஜெயந்தி நகர், லோயர் கூலி பேட்டை, மஞ்சுதளா, பாய்ஸ் கம்பெனி, மாரிமுத்து தெரு, ராஜீவ் நகர், கேட்டில் பவுண்ட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில் குழாய்கள் பொருத்தப்பட்டன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி முகமது அலி தலைமை வகித்து, இரு தொட்டிகளின் கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.அதிகாரிகள் கூறுகையில், 'கன்டோன்மென்ட் வாரியத்தில் சிற்றாறுகளில் இருந்து நேரடியாக நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. முதற்கட்டமாக இரு இடங்களில் தடையில்லாத நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.தற்போது, இரண்டாம் கட்டமாக, 1.01 கோடி ரூபாய் செலவில், பொது குழாயில் தடையில்லாத, தண்ணீர் வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாரியத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், ஆறுகளில் இருந்து நீர் எடுத்து தொட்டிகளில் தேக்கி, 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. தற்போது வாரியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது,' என்றனர்.விழாவில், வாரிய பொறியாளர் சுரேஷ் குமார், சுகாதார அதிகாரி ராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.