சுற்றுலா நகரில் மழை பெய்தால் கழிவுநீர் தேக்கம்: சாலையில் நடமாட முடியாமல் பயணிகள் அவதி
ஊட்டி: ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்து வரும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருவதால், தாவரவியல் பூங்கா சாலை உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகளின் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சியில், 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். 30 வார்டுகள் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள தொட்டி வழியாக கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு சென்று, ஆறாவது மைல் நீர் தேக்கத்தில் கலக்கிறது.நகரில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆங்காங்கே உடைந்த நிலையில் உள்ளது. மழையின் போது தொட்டிகள் நிரம்பி, பாதாள சாக்கடை மூடிகளின் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்குவதால், துர்நாற்றுத்துடன் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தொடரும் அடைப்பு
ஊட்டி நகரில் பாதாள சாக்கடையில் பல ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்களை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சிறிய மழைக்கு நகரில் ஆங்காங்கே மேனுவல் நிரம்பி வெளியேறி வருவது வாடிக்கையாகிவிட்டது.தவிர, மழைநீர் செல்லும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் சுத்திகரிப்பு செய்யாமல் விட்டதாலும், சாலையில் இருந்து தாழ்வாக உள்ள பகுதிகள், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்கள், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா, நகராட்சி மார்க்கெட், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மழைநீர் குளம் போல் சாலையில் தேங்கி வருகிறது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும், சர்வதேச சுற்றுலா நகரம், 'நரகம்' போல் மாறி சுகாதார சீர்கேடாக காட்சி அளிப்பது, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பிரத்யேக திட்டம் அவசியம்
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகளில் 980 பாதாள சாக்கடை இணைப்புகளுடன் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளன. இவற்றின் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வழியில்லாததால், கனமழையின் போதும் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நகராட்சியின் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளுக்கென பிரத்யேக திட்டத்தை கொண்டு வர வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பதிக்க நடவடிக்கை
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''நகரில் பாதாள சாக்கடையில் அமைக்கப்பட்ட பழைய குழாய்கள் மாற்றி, பெரிய குழாய்களை பதிக்க மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு வாசிகள், காட்டேஜ், தங்கும் விடுதி, ஓட்டல் வணிக நிறுவன உரிமையாளர்கள் எக்காரணத்தை கொண்டும் மழை நீரை பாதாள சாக்கடைக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.