உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கணவனை தாக்கிய கரடியை விரட்டிய மனைவி; காயமடைந்தவருக்கு கோவையில் தீவிர சிகிச்சை

கணவனை தாக்கிய கரடியை விரட்டிய மனைவி; காயமடைந்தவருக்கு கோவையில் தீவிர சிகிச்சை

கூடலுார், ;கூடலுார் தேவாலா ஹட்டி அருகே கணவனை தாக்கிய கரடியை, மனைவி சப்தமிட்டு விரட்டியதால் காயத்துடன் உயிர் தப்பினார். நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவாலா ஹட்டி புதியகுன்னு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 55. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். பல வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, கரடி ஒன்று வீட்டின் அருகே கன்று குட்டியை விரட்டியது. அதனை காப்பாற்ற, பாலகிருஷ்ணன் சப்தமிட்டுள்ளார். திடீரென, கரடி இவரை துரத்தி வந்து தலையில் தாக்கி உள்ளது. இவரின் அலறல் சப்தம் கேட்ட மனைவி சசிகலா, சப்தமிட்டு கரடியை விரட்டி உள்ளார். பாலகிருஷ்ணன் தலை உள்ளிட்ட பல இடங்களில் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் கலைக்கோவில் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவரை மீட்டு, வனத்துறை வாகனத்தில் கூடலுார் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தினர். முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சசிகலா கூறுகையில், ''எனது வீட்டின் அருகே திடீரென கணவர் அலறும் சப்தம் கேட்டு ஓடி வந்த போது, கரடி அவரின் தலையை பிடித்து தாக்கியது. எனது சப்தம் கேட்ட வுடன் ஓடியது. அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இப்பகுதியில் உலா வரும் கரடியை வனத்துறையினர் பிடிக்க வேண்டும்,'' என்றார். சம்பவம் தொடர்பாக நாடுகாணி வனச்சரகர் ரவி விசாரணை மேற்கொண்டார். வன ஊழியர்கள், கரடியை தேடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ