/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி சமையல் அறையை சேதப்படுத்திய காட்டு யானை; இரவில் தீ மூட்டி கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறை
பள்ளி சமையல் அறையை சேதப்படுத்திய காட்டு யானை; இரவில் தீ மூட்டி கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறை
கூடலுார்; பள்ளி சமையல் அறையை காட்டு யானை சேதப்படுத்தியதை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இரவில் தீ மூட்டி யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மசினகுடி மாயார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை, இரவு காட்டு யானை, பள்ளி சுற்று சுவரை சேதப்படுத்தி, பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தது. தொடர்ந்து, பள்ளி சமையல் அறையை சேதப்படுத்தி அங்கு மாணவர்களுக்கு சமைக்க வைத்திருந்த ஒரு மூட்டை அரிசியை வெளியே எடுத்து வந்து உட்கொண்டு சென்றது. வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, காட்டு யானைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவதை தடுக்க, இரவில் வன ஊழியர்கள், பள்ளி வளாகத்தில் தீ ஏற்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை வனச்சரகர் தனபால் ஆய்வு செய்தார்.