உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊசிமலையில் குட்டி ஈன்ற காட்டு யானை : காட்சிமுனை தற்காலிகமாக மூடல்

ஊசிமலையில் குட்டி ஈன்ற காட்டு யானை : காட்சிமுனை தற்காலிகமாக மூடல்

கூடலுார்: கூடலுார் அருகே உள்ள, ஊசிமலை பகுதியில், காட்டு யானை குட்டி ஈன்றதால், காட்சி முனை தற்காலிகமாக மூடப்பட்டு, சுற்றுலா பயணியர் செல்ல தடை விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுாரிலிருந்து, 9 கி.மீ., தொலைவில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஊசிமலை காட்சி முனைக்கு சுற்று லா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர். காட்சி முனையை திறப்பதற்காக நேற்று, ஊழியர்கள் அங்கு சென்றபோது. காட்டு யானை குட்டி ஈன்றிருப்பதும், தாயுடன் மேலும், இரண்டு யானைகள் இருப்பது தெரியவந்தது. நுழைவு வாயில் திறக்காமல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நடுவட்டம் வனச்சரகர் தட்சிணாமூர்த்தி, கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வானவர் வீரமணி, வன ஊழியர்கள் ஆய்வு செய்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், குட்டிக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, காட்சி முனையை தற்காலிகமாக மூடி, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், யானை குட்டியை அதன் தாய் மற்றும் இரண்டு யானைகள் பாதுகாத்து வருகிறது. சுற்றுலா பயணியரால் குட்டி யானைக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, காட்சி முனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குட்டியுடன் யானைகள் வேறு பகுதிக்கு சென்ற பின், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை