உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மசினகுடியில் வன உயிரின புகைப்பட கண்காட்சி

மசினகுடியில் வன உயிரின புகைப்பட கண்காட்சி

கூடலூர்: வன உயிரின வார விழாவை முன்னிட்டு, முதுமலை மசினகுடியில் வன உயிரின புகைப்பட கண்காட்சி நடந்தது. முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி குழந்தை இயேசு துவக்க பள்ளியில் மசினகுடி வனத்துறை, இந்திய வன உயிரின அறகட்டளை, மசினகுடி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், வன உயிரின புகைப்படக்கண்காட்சி துவங்கியது. ஊட்டி அரசு கல்லுாரி இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். புகைப்பட கண்காட்சியை மசினகுடி துணை இயக்குனர் வித்யாதர் துவக்கி வைத்து பேசுகையில், ''புகைப்படக் காட்சி நடத்துவதன் மூலம் பல விலங்குகளின் அரிய புகைப்படங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. களப்பணிக்கு செல்லும் வன ஊழியர்கள் பலவிதமான வனவிலங்குகளை பார்க்கும்போது அதனை புகைப்படமாக எடுக்க கற்று கொள்ள வேண்டும். இது தொடர்பாக, வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் முன்னாள் பேராசிரியர் சுகுமாரன் பேசுகையில், ''மசினகுடி போன்ற, வனம் சார்ந்து பகுதிகளில் இதுபோன்ற புகைப்பட கண்காட்சி நடத்துவது தேவையாக உள்ளது. இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள், வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்,'' என்றார். நிகழ்ச்சியில், வனச்சரகர்கள் தனபால், ராஜன், மசினகுடி இயற்கை சுற்றுச்சூழல் மையத்தின் நிர்வாகி ஆபீத், வன ஊழியர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ