உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டக்கலை பணியாளர்களுக்கு அரசின் பலன்கள் முழுமையாக கிடைக்குமா? குடும்ப நல நிதி பிடிக்கப்பட்டும் பயனில்லாத சூழ்நிலை

தோட்டக்கலை பணியாளர்களுக்கு அரசின் பலன்கள் முழுமையாக கிடைக்குமா? குடும்ப நல நிதி பிடிக்கப்பட்டும் பயனில்லாத சூழ்நிலை

குன்னுார் : நீலகிரி மாவட்ட தோட்டக்கலை பணியாளர்களுக்கு அரசின் பயன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்காத சூழ்நிலை தொடர்கதையாக உள்ளது.நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா; குன்னுார், கல்லார் பழப் பண்ணைகள்; தும்மனட்டி, நஞ்சநாடு, தேவாலா தோட்டக்கலை பண்ணைகள்; குன்னுார் பழவியல் நிலையம்; தேயிலை பூங்கா ஆகியவை தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நீலகிரியில் கடந்த, 2007ம் ஆண்டு, 1,083 பேர் நிரந்தர பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பணிவரன் முறையின் போது, மற்ற துறைகளில் காலமுறை ஊதியம் வழங்கப்பட்ட போது, தோட்டக்கலை பணியாளர்களுக்கு, எந்த சலுகைகளும் வழங்காமல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்பட்டது. கடந்த, 2012ல் வேளாண், வனம் உள்ளிட்ட துறையில் உள்ளவர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்த போதும், தோட்டக்கலை பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பலரும் பணி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த, 2020ல், நீலகிரியில், 225 பேர் உட்பட மாநிலத்தில், 660 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 16 ஆண்டுகளாகியும், நிரந்தர பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

நிதி பிடித்தம் மட்டுமே...

இதே போல, தோட்டக்கலை பூங்கா, பண்ணையில், 2022-24 வரையில், 15 பேர் இறந்துள்ளனர். இவர்களுக்கு குடும்ப நல நிதியாக, 110 ரூபாய் பிடிக்கப்பட்ட நிலையில், அந்தந்த பண்ணை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து முன்பணமாக, 25 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. 4.75 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. 40 ஆண்டுகள் வரை உழைத்து, ஓய்வு பெறுபவர்களுக்கு, பணிக்கொடை வழங்கப்படுவதில்லை. அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மோகன்குமார் கூறுகையில்,''பணியாளர்களுக்கு சிறப்பு சேம நல நிதி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் சேம நல நிதியாக, 70 ரூபாய் பிடிக்கப்பட்டு, இவர்கள் பணி ஓய்வு பெறும் போது, செலுத்திய சந்தா தொகை, அதற்கான வட்டி தொகை மற்றும் அரசின் பங்கு தொகை, 10 ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும். இதில், 2007 முதல் 2022 வரை பிடித்தம் செய்து, பலருக்கும் நிதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது,'' என்றார்.

செல்லப்படும்...

தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''ஊதிய உயர்வு தொடர்பாக இன்னும் சில நாட்களில் தகவல் வரும். குடும்ப நல நிதி முன்பு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை தற்போது பிடிப்பதில்லை. 'எதன் அடிப்படையில் பிடித்தம் செய்கின்றனர்,' என, கேள்வி எழுப்பிய கருவூல அதிகாரிகள், தணிக்கையில் பிரச்னை எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பணியாளர்கள் பிரச்னைகள் குறித்து, தோட்டக்கலை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை