உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா, பண்ணை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கப்படுமா?தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை அவசியம்

பூங்கா, பண்ணை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கப்படுமா?தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை அவசியம்

குன்னுார்: 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள, பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பிற சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், சென்னை உட்பட, 85 இடங்களில் அரசு தோட்டக்கலை துறை பூங்காக்கள், பண்ணைகள் உள்ளன. 2007ல் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றிய, 1,083 பேர் முதற்கட்டமாக பணிவரன் முறை செய்யப்பட்டு, நிரந்தர பண்ணை பணியாளர்களாக சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். 2020ல், 2ம் கட்டமாக, 660 தினக்கூலி பணியாளர்கள் பண்ணை பணியாளராக பணி நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம், 1,743 பேரில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்தவர்களை விடுத்து, தற்போது, 1,053 பேருக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. சலுகைகளில் பாரபட்சம் இந்நிலையில், வேளாண், பொதுப்பணி, வனம், வேளாண் பல்கலை கழகம் உள்ளிட்ட துறைகளில உள்ளவர்களுக்கு கால முறை ஊதியம், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நிலையில், தோட்டக்கலை பண்ணை, பூங்காக்களில் உள்ளவர்களுக்கு இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பூங்கா, பண்ணைகளில் பணிபுரியும் மஸ்துார்கள், 7வது காலமுறை ஊதியத்தில் 15,700 முதல் 35,100 ருபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். இதே, 7 ஊதிய குழு பரிந்துரையின் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள், 8 மணி நேரத்திற்கும் மேலாக பணிகள் மேற்கொண்ட போதும், 7,700 முதல் 24,200 ரூபாய் வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநில அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க தலைவர் மதுரம் கூறுகையில், '' இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பண்ணை பணியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் பணி மூப்பு அடிப்படையில் இவர்களுக்கும் வழங்க வேண்டும்; தோட்டக்காரர்கள், அலுவலக உதவியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட அடிப்படை பணிகளில் உள்ளவர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அரசு ஆணைகள் இருந்தும் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவைகள் கிடைப்பதற்கு, அதிகாரிகள் தடை ஏற்படுத்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில நிறைவேற்றும் என நம்புகிறோம்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை