மாநகராட்சியாகும் அறிவிப்பால் மாற்றம் நிச்சயம்; ஊட்டியில் சுற்றுலா, விவசாயம் மேம்பட வாய்ப்பு
ஊட்டி : ஊட்டி நகராட்சி, மாநகராட்சியாகும் அறிவிப்பால் சுற்றுலா; விவசாயம் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான, ஊட்டி நகராட்சி, 36 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக,1987 முதல் இயங்கி வருகிறது. 35 லட்சம் சுற்றுலாபயணிகள்
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 88 ஆயிரத்து 430 மக்கள் தொகை உள்ளது. ஊட்டி நகரின் முக்கிய தொழிலாக சுற்றுலா, தேயிலை, மலை காய்கறி விவசாயம் உள்ளது. இங்கு, ஆண்டு முழுவதும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் நடந்து வருகிறது. இவைகள் மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. நகராட்சியில் தீர்மானம்
இந்நிலையில், ஊட்டி நகராட்சியுடன், கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளை இணைப்பதன் மூலம், மாநகராட்சியாக தரம் உயர்ந்தால், பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளதாக கருதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, ஊட்டி மாநகராட்சியாக உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருமானம் அதிகரிக்கும்
அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் இதன் பரப்பளவு, 212.51 ச.கி.மீட்டராக மாறும். மக்கள் தொகை, 1.30 லட்சமாக உயரும். ஆண்டு வருமானமும், 52.14 கோடியாக உயரும். அரசு மேம்பாட்டு திட்டங்களில் அதிக அளவில் ஒதுக்கீடு கிடைக்கும். ஊட்டியுடன் இணைக்கப்படும், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை மேம்பாட்டு வசதிகள் கிடைத்து, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.ஊட்டி நகரின் முக்கிய தொழிலான சுற்றுலா, விவசாயம், தேயிலை உற்பத்தி ஆகியவை வளர்ச்சி அடைந்து வேலைவாய்ப்புகள் உருவாகும். ஊட்டியில், சுற்றுலா பயணிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் சென்னையை போன்று, உலக தரத்தில் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், கிராமப்புற மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை,' என்றனர்.