உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணத்துடன் பையை தவறவிட்ட பெண்; கண்டெடுத்து ஒப்படைத்த மகளிர் போலீஸ்

பணத்துடன் பையை தவறவிட்ட பெண்; கண்டெடுத்து ஒப்படைத்த மகளிர் போலீஸ்

குன்னுார்; குன்னுாரில் ஸ்கூட்டியில் சென்ற போது, பெண் ஒருவர் தவற விட்ட பணத்துடன் இருந்த கைப்பையை, கண்டெடுத்து ஒப்படைத்த மகளிர் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.குன்னுார் ஓட்டுபட்டறையை சேர்ந்தவர் மணி என்பவரின் மகள் ஆதிரா. நேற்று இவர் தனது, பாட்டியின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். டாக்டரின் கையெழுத்து பெற கூறியதால், ஸ்கூட்டியில், கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வெலிங்டன் ரயில் பாலம் அருகே இவரின் கைப்பை தவறி கீழே விழுந்துள்ளது.அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, மகளிர் காவல் நிலைய காவலர் ஷீபா அதனை எடுத்து, ஸ்கூட்டியை பின் தொடர்ந்தார். அவர் மருத்துவமனைக்கு சென்றதால், அவரால் கொடுக்க முடியவில்லை.இந்நிலையில், குன்னுாரில் இருந்த காவலர் நித்யாவிடம், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆதார் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்த கைப்பை தொலைந்து விட்டதாக, ஆதிரா தகவல் கொடுத்தார். அதே சமயம், ஷீபா கைப்பை தன்னிடம் கிடைத்ததை நித்யாவிடம் கூறினார். தொடர்ந்து, போலீசார் முன்னிலையில், பணத்துடன் இருந்த கைப்பை ஆதிராவிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளிர் போலீசாருக்கு ஆதிரா நன்றி தெரிவித்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ