பிரேத பரிசோதனைக்காக பெண் உடல் ஊட்டிக்கு பரிந்துரை: மக்கள் சாலை மறியல்
குன்னுார்; குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையை செய்ய, ஊட்டிக்கு அனுப்புவதாக கூறியதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவர்தனன். இவரது மனைவி ராதிகா, 25. தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக பணியாற்றினார். நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக, குன்னுார் அரசு மருத்துவமனையில் ராதிகா, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்தும், ராதிகா உயிரிழந்துள்ளார். நேற்று காலை இவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனையில் இருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மவுண்ட் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். குன்னுார் டி.எஸ்.பி., ரவி தலைமையில் போலீசார் பேச்சு நடத்திய போது, மக்கள் கூறுகையில், 'குன்னுார் மருத்துவமனையில் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்யாமல் ஊட்டிக்கு அனுப்புகின்றனர்,' என்றனர். தொடர்ந்து, சமாதானம் செய்த போலீசார், மக்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, டாக்டர்கள் முன்னிலையில் பேச்சு நடத்தினர். அதன்பின், குன்னுார் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் மவுண்ட் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.