40 ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்பட்ட சிறியூர் சாலை பணி நிறுத்தம்! கலெக்டருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் தீர்வு
கூடலுார்; மசினகுடி அருகே வாழை தோட்டம் - சிறியூர் சாலை சீரமைப்பு பணியில், ஒப்பந்தத்தில் உள்ளதை விட, சாலையின் அகலம் குறைவாக இருப்பதாக கூறி, பணிகளை பழங்குடியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.முதுமலை மசினகுடி அருகே உள்ள சிறியூர், ஆனைகட்டி, செக்கநள்ளி கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து பயன்பாட்டுக்காக, வாழை தோட்டம் முதல் சிறியூர் வரை, 14 கி.மீ., சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முக்கிய சாலை, 40 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அவசர தேவைக்கு கூட மக்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். மேலும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த சாலையில், கர்ப்பிணிகள்; நோயாளிகளை வாகனங்களில் கொண்டு செல்லவும் பாதிப்பு ஏற்பட்டது. 'குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்,' என, பழங்குடியினர் 'மனுபோர்' நடத்தி வந்தனர். நிதி ஒதுக்கிய மத்திய அரசு
இந்நிலையில், வாழை தோட்டம்- சிறியூர் சாலையை சீரமைக்க மத்திய அரசின் சார்பில், 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் விடப்பட்டு, 3 மீட்டர் அகலத்தில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், 'கடந்த, 40 ஆண்டு களுக்கு பின் நடக்கும் இந்த பணியில் ஒப்பந்த விதிகளை மீறி, சாலையின் அகலம் குறைவாக போடப்பட்டு வருகிறது,' என, பழங்குடியினர் குற்றம் சாட்டினர். இதனால், அதிருப்தி அடைந்த மக்கள் பணிகள் நடைபெறும் பகுதியில் கூடி, 'ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலையை, 3.75 மீட்டர் அகலத்தில் சீரமைக்க வேண்டும்,' என வலியுறுத்தினர். அப்போது, ஒப்பந்ததாரர் கூறுகையில்,'வனத்துறை உத்தரவுப்படி, 3 மீட்டர் அகலத்தில் சாலை சீரமைத்து வருகிறோம். வனத்துறை அனுமதி அளித்தால், 3.75 மீட்டர் அகலத்தில் சாலை சீரமைக்க தயாராக உள்ளோம்,' என்றார். சாலை பணி நிறுத்தம்
இதனை ஏற்க மறுத்த கிராமமக்கள் நேற்று முன்தினம் மலை சாலை பணியை தடுத்து நிறுத்தனர். நேற்றும் பணிகள் நடக்கவில்லை. கிராம மக்கள் கூறுகையில், 'இந்த சாலை ஏற்கனவே, 4 மீட்டர் அகலத்தில் உள்ளது. எனவே, ஒப்பந்தத்தின்படி, 3.75 அகலத்தில் சாலை அமைக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கப்படும். அதில் தீர்வு கிடைக்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இச்சாலை வனத்துறைக்கு சொந்தமானது. எனவே, 3 மீட்டர் அகலத்தில் மட்டுமே அமைக்க வேண்டும், அதன்படி பணிகள் நடக்கிறது. சாலையை மேலும் அகலப்படுத்த வேண்டும் எனில் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். வனத்துறை இதற்கான உத்தரவு வழங்க முடியாது,' என்றனர். இதனால், 40 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் சாலை பணி நிறுத்தப்பட்டதால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நேற்று மாலை ஊர்தலைவர் சங்கர் கூறுகையில்,'' இந்த பிரச்னை தொடர்பாக, மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசியதை தொடர்ந்து, சுமூக தீர்வு ஏற்பட்டது. இதனால், நாளை (இன்று) முதல் அப்பகுதியில் சாலையை பணியை தொடர சம்மதித்தோம்,'' என்றார்.