யானைபள்ளம் சாலை துண்டிப்பு; பழங்குடியின மக்கள் தவிப்பு
குன்னுார் ; குன்னுார் யானை பள்ளம் உட்பட பழங்குடியின கிராமங்கள் செல்லும் சாலையின், 7 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன் சாலை துண்டிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட யானை பள்ளம், சின்னாள கோம்பை, சடையன் கோம்பை உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் நுாற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் விழுந்து சிறிய பாறைகளும் உருண்டன.ஒரு இடத்தில் சாலை பாதியளவு துண்டிக்கப்பட்டது. கிராம மக்கள் உலிக்கல் பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தும் அகற்ற பொக்லைன் அனுப்பாத நிலையில், மக்கள் ஒன்றிணைந்து மண்ணை அகற்றி, ஒருவர் நடந்து செல்லும் வகையில் வழியை ஏற்படுத்தினர். இதன் பிறகு பள்ளி ஹாஸ்டல்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர் அனுப்பி வைத்தனர்.இப்பகுதிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் கலெக்டர் சங்கீதா தலைமையில். பொக்லைன் உதவியுடன் மண் அகற்றும் பணி நடந்தது. அதிகாரிகள் கூறுகையில், 'இரவு முழுவதும் பணியை மேற்கொண்டு மக்கள் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.