உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை ஏமாற்றியதால் விளைச்சல் குறைவு; காபி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மழை ஏமாற்றியதால் விளைச்சல் குறைவு; காபி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலுார்; கூடலுாரில் விளைச்சல் குறைந்திருந்த நிலையில், காபிக்கு கூடுதல் விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக, விவசாயிகள் காபி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, 10 ஆயிரத்து 700 ஏக்கரில் 'ரொபஸ்டோ' வகை காபி; 5,750 ஏக்கரில் அரபிக்கா வகை காபியும் பயிரிட்டுள்ளனர். ஆண்டுதோறும், மார்ச், ஏப்., மாதம் காபி செடிகளில் பூ பூக்கும் நவ., முதல் ஜன., வரை காபி பறிக்கும் பணி நடப்பது வழக்கம். நடப்பு ஆண்டு, காபி பூப்பூக்கும் காலத்தில் கோடை மழை ஏமாற்றியதால், விளைச்சல் குறைந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர்.தற்போது, பச்சை காபி கிலோ, 70 ரூபாய்; காய்ந்த காபி கிலோ, 220 முதல் 230 ரூபாய்; சுத்தம் செய்யப்பட்ட காபி பருப்பு, 400 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு விளைச்சல் குறைவால் காபிக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது; மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர். கூடலுார் காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் கூறுகையில், '' பொதுவாக மார்ச், ஏப்., மாதத்தில் காபி செடியில் பூ பூக்கும். அப்போது கோடை மழை பெய்வதன் மூலம், மகசூல் கிடைக்கும். நடப்பு ஆண்டு, காபி பூ பூத்த மாதத்தில் கோடை மழை ஏமாற்றியதல் மகசூல் குறைந்துள்ளது. இதனால், தற்போது கூடுதல் விலை கிடைத்து வருவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு இருக்காது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை