உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மான் வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்த வாலிபர் கைது: தப்பிய மூவர்

மான் வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்த வாலிபர் கைது: தப்பிய மூவர்

ஊட்டி; எடக்காடு அருகே, மான் வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.மஞ்சூர் எடக்காடு அருகே கன்னேரி பகுதியில், குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிகுளிஹல்லா என்ற இடத்தில், கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் அருகில் சென்று விசாரித்த போது, 4 பேர் காரில் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது, 3 பேர் திடீரென தப்பி ஓடினர். காரை ஓட்டி வந்த நபர் கையில் வைத்திருந்த துப்பாக்கியுடன் தப்ப முயன்ற போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து, கார் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. உடனடியாக அவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கேரள மாநிலம், வழிக்கடவு பகுதியை சேர்ந்த அப்துல் அமீன்,31, என்பதும், கடமான் அல்லது காட்டுமாடு வேட்டையாட கும்பலாக வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒற்றை குழல் துப்பாக்கி, தோட்டாக்கள், வெட்டு கத்திகள், தலையில் மாட்ட கூடிய டார்ச் லைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் வந்த மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பசீர்,36, ஷாபி,31, சுனீர்,39, ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !