ஆக்கிரமித்த பொது இடத்தில் மின் இணைப்பு துண்டிப்பு
பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. இக்குளத்தை, கடந்த பல ஆண்டுகளாக இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், 1965ல், இதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், அந்த கிணற்றை ஆக்கிரமிப்பு செய்து, மின் இணைப்பு பெற்று, தங்களது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தனர்.இதுகுறித்து, தினமலர் நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. நமது நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து, மங்கூன் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சில நாட்களுக்கு முன், வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு, புகாரின்தாரரின் மனுவை ஏற்று, மின் இணைப்பை துண்டித்து, கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவிட்டனர்.