போலி சான்றிதழில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் டிஸ்மிஸ்
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் மருதைராஜ், 58. இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையில், இவரது சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய, பெரம்பலுார் மாவட்ட உதவி தேர்வு இயக்குனர் அலுவலகத்துக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வாயிலாக அனுப்பப்பட்டன.அவற்றில், மருதைராஜ் ஆசிரியர் பட்டய படிப்பில் இரண்டு பாடத்தில் தோல்வியுற்றதும், போலி சான்றிதழ் கொடுத்து, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மருதைராஜை ஆசிரியர் பணியிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து, பெரம்பலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.போலி சான்றிதழ் வாயிலாக அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, லட்சக்கணக்கில் சம்பளமாக பெற்று, சொத்துக்களை இவர் சேர்த்துள்ளார். இவற்றை அரசு பறிமுதல் செய்யும் என்பதால், சொத்துக்களை, மனைவி, பிள்ளைகள் பெயரில் பெயர் மாற்றம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.