ரூ.16.38 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு
பெரம்பலுார்:பெரம்பலுார், குளத்துமேடு அண்ணா நகரை சேர்ந்தவர் தியாகராசு, 45. இவரிடம், 2009-ம் ஆண்டு கரூர் மாவட்டம், தோகைமலை வேதாராஜபுரத்தை சேர்ந்த ஷாஜகான், 74, என்பவர் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால், ஆறு மாதங்களுக்குள் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.இதை உண்மை என நம்பிய தியாகராசு, 16 லட்சம் ரூபாயை ஷாஜகானிடம் கொடுத்தார். ஆனால், கொடுத்த பணமும், கூடுதல் பணமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின்படி, பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரேம்குமார் நேற்று, ஷாஜகானுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.