கார் - வேன் மோதியதில் 4 பேர் பலி
புதுக்கோட்டை: திருமயம் அருகே இரண்டு கார்கள், மினி வேன் மோதியதில் கணவன், மனைவி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.புதுக்கோட்டையில், திருச்சி -- காரைக்குடி பைபாஸ் சாலையில் இருந்து காரைக்குடி நோக்கி நேற்று 'மாருதி எஸ்டீம்' காரில், ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர்.அதேசமயம், காரைக்குடியில் இருந்து, புதுக்கோட்டை நோக்கி 'டாடா ஏஸ்' மினிவேன் வந்தது. படுகாயம்
அப்போது, நமணசமுத்திரம் பகுதியில், புதுக்கோட்டையில் இருந்து எதிரே வந்த கார் மாருதி எஸ்டீம் கார், கட்டுப்பாட்டை இழந்து, தடம் மாறி, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில், காரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர். பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். டாடா ஏஸ் வாகனத்தில் டிரைவருக்கு அருகே அமர்ந்திருந்த ஒருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தார். எதிரே வந்த மாருதி எஸ்டீம் கார் மோதியதில், போக்ஸ்வேகன் காரும் லேசாக பாதிக்கப்பட்டது. அந்த காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விசாரணை
சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியான நிலையில், நான்கு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் ரம்யா, 36, என்பவர் உயிரிழந்தார்.டாடா ஏஸ் டிரைவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து, நமணசமுத்திரம் போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இறந்தவர்கள் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், 65, இவரது மனைவி அருணா, 60, என்பதும், டாடா ஏஸ் வாகனத்தில் இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த சுதாகர், 39, என்பதும் தெரிய வந்தது. நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.