மணல் கொள்ளைக்கு உடந்தை 3 போலீசார், எஸ்.ஐ., டிரான்ஸ்பர்
திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியை சேர்ந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரான அ.தி.மு.க., பிரமுகர் ஜெகபர்அலி, ஜனவரியில் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெகபர்அலி கொலையில், குவாரி உரிமையாளர்களுடன் போலீசாரின் தொடர்புகள் பற்றி, ஏ.டி.எஸ்.பி., முரளிதரன் விசாரித்த போது, புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலக எஸ்.ஐ., பிரபாகரன், குவாரி உரிமையாளர்களுடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.அறந்தாங்கியில் திருட்டு மணல் லாரி சோதனையில் இருந்து தப்பிக்க, எஸ்.ஐ., பிரபாகரன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலக எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் செல்வேந்திரன், ராமபாண்டியன், பாலசுப்பிரமணியன் ஆகிய நான்கு பேரையும், தென் மண்டலத்திற்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.