அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர் வீடுகளில் ரெய்டு
அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர் வீடுகளில் 'ரெய்டு'புதுக்கோட்டை, நவ. 30--புதுக்கோட்டையில், பா.ஜ., மற்றும் அ.திமு.க, பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கருக்காக்காடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரவிச்சந்திரன், 52, முருகானந்தம், 49, பழனிவேல், 47. இவர்கள், முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தமிழக முழுதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணி துறை ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர்.10 மணி நேரம் சோதனைஇவர்கள், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்பட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், 2022ல், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், வழக்கும் பதிவாகி நடைபெற்று வருகிறது.இதில், பல்வேறு சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக தெரியவந்தது. அதன்படி, அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து பெற்ற நிலையில், நேற்று புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீடு, கருக்காக்காடு பகுதியில் உள்ள முருகானந்தம், பழனிவேல் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகளில், 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.இதேபோல, முருகானந்தத்தின் ஆதரவாளர் ஆலங்குடியை சேர்ந்த பழனிவேல் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. முருகானந்தம், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ., பொருளாளராக உள்ளார். இவரது சகோதரர் பழனிவேல், அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.வெட்டன்விடுதி, கடுக்காக்காடு, ஆலங்குடி பகுதிகளில் நேற்று, 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. புதுக்கோட்டையில் முருகானந்தத்தின் வீட்டில் மட்டும் தொடர்ந்து பத்து மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது.தரணி குழுமம்திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரத்தினம். தரணி குழுமம் என்ற பெயரில் திண்டுக்கல், புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்கள், வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில், செங்கல், டிரான்ஸ்போர்ட், மணல் குவாரி உள்ளிட்ட தொழில்களை செய்கிறார். இவரின் வீடு, அலுவலகம், உறவினர் கோவிந்தன் வீடு, அலுவலகத்தில், 2023 செப்டம்பர், நவம்பரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு, அமலாக்கத்துறையை சேர்ந்த ஆறு பேர் குழுவினர், இரு கார்களில் வந்து ரத்தினத்தின் தரணி குழும அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மாலை, 5:00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஏமாற்றிய நிறுவனங்களின்ரூ.25.38 கோடி சொத்து பறிமுதல்சென்னையை சேர்ந்த, 'நபிசா ஓவர்சிஸ்' மற்றும் 'சபா லெதர்ஸ்' நிறுவனங்கள், இந்தியன் வங்கியிடம், தங்களின் சொத்து ஆவணங்களை சமர்ப்பித்து, 23.46 கோடி ரூபாய் கடன் பெற்றன. அதன்பின், வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் ஏமாற்றின. அந்நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக கொடுத்த சொத்து ஆவணங்களை, இந்தியன் வங்கி ஆய்வு செய்தது. அப்போது, அவை போலி என்று தெரியவந்தது. இது குறித்து, இந்தியன் வங்கி அளித்த புகார் அடிப்படையில், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில், சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்ததால், அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.கடந்த 2021ல், அந்நிறுவனங்களுக்கு சொந்தமான, 20.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. அவற்றை தற்போது, இந்தியன் வங்கியிடம் ஒப்படைத்துள்ளது. அவற்றின் தற்போதைய மதிப்பு, 25.38 கோடி ரூபாய் என, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.