அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழப்பு அதிகரிப்பு; தலைக்காய சிகிச்சைப் பிரிவை துவக்குங்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதுமான கட்டட வசதிகள் இந்தும் தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லாததால் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளவர்களை மதுரைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழக்கின்றனர்.ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையானது அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு ரூ.154.84 கோடியில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிறது.மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, என பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லை. அதற்கான டாக்டர்களும் நியமிக்கப்படவில்லை.இதனால் விபத்துக்களில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைபவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கும் நிலை உள்ளது.தலைக்காயத்தால் உயிருக்கு போராடும் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் உயிரிழக்கும் சம்பங்கள் அதிகரித்து வருகிறது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆன பிறகும் கூட தலைக்காய சிகிச்சை பிரிவும், அதற்கான சிறப்பு டாக்டர்களும் இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.எனவே அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலைக்காய சிகிச்சைப்பிரிவை ராமநாதபுரத்தில் துவக்கவும், அதற்கான சிறப்பு டாக்டர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.