உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 400 ஆண்டுகள் பழமையான  நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

400 ஆண்டுகள் பழமையான  நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராமநாதபுரம்: சிக்கல் அருகே தத்தங்குடி கிராமத்தில் காவல் தெய்வமாக சூருடைய அய்யனார் கோயில் அருகேயுள்ள குளத்தின் கீழ்ப்புறத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் தகவலின்படி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு, தத்தங்குடியில் அய்யனார் கோயில் நடுகல்லை ஆய்வு செய்ததில் 400 ஆண்டுகள் பழமையானது நிலக்கொடைக் கல்வெட்டு என்று தெரிய வந்தது. கல்வெட்டு குறித்து விஜயராமு தெரிவித்ததாவது: ஸ்ரீ சகாப்தம் 1554 , ஆங்கில வருடம் சித்திரை மாதம் 13 ஆம் தேதி என்று இக்கல்வெட்டு எழுதிய காலத்தைக் குறிக்கிறது. இது 2வது சேதுபதியாகிய கூத்தன் சேதுபதியின் 9 வது ஆட்சி ஆண்டுக் காலமாகும். அப்போது இந்த நிலக்கொடையைச் செய்துள்ளார். விஸ்வநாத நாயக்கருக்கும் திருமலை நாயக்கருக்கும் புண்ணியம் உண்டாக என்றும், ராமசேதுவின் காவலர் என்றும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.ராமயணத்தில் குறிப்பிட்டுள்ள (பாலம்) சேதுவிற்கு காவலாக உள்ளவர்களாக இருந்த இந்த சேதுபதிகள் 1601 க்கு பின் மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு உட்பட்ட சேதுபதி மன்னர்களாக இப்பகுதியை ஆட்சி செய்தார்கள். எனவே தான் மதுரை நாயக்க மன்னர்களின் முதல் ஆட்சியாளராகிய விசுவநாத நாயக்கருக்கும், அப்போதைய ஆட்சியாளரான திருமலை நாயக்கருக்கும் புண்ணியம் உண்டாக என்று கூத்தன் சேதுபதி, இக்கல்வெட்டின் ஆரம்பத்தில் எழுதி உள்ளார். கமண்டலம், பிரம்ம தண்டம், பிரை, சூலாயுதம் போன்றவை கோட்டுருவமாக உள்ளது. சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் தொடர்புடைய,அருகிலுள்ள அய்யனார் கோயிலுக்கு அல்லது துறவிகளுக்கு அல்லது அவ்வூரில் வாழ்ந்த பிராமணர்களுக்கு வழங்கிய நிலக்கொடைக் கல்வெட்டாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கல்வெட்டு உள்ள நடுகல்லை எண்ணெய், சந்தனம், குங்குமம் போன்றவைகள் பூசி மக்கள் குலதெய்வமாக வணங்கி வருவதால் எழுத்துக்கள் தேய்த்து மறைந்துள்ளது. மேலும் பாதிக்கு மேல் கல்வெட்டுப் பகுதி கீழே பதிந்தும் உள்ளது. ஆகையால் முழுமையாக படிக்க முடியாத நிலையில் உள்ளது, எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி