உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நோய் கண்டறிதலில் பாதுகாப்பு குறித்த புதிய பாடத்திட்டம் உருவாக்க எய்ம்ஸ் குழு முயற்சி இன்று உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 

நோய் கண்டறிதலில் பாதுகாப்பு குறித்த புதிய பாடத்திட்டம் உருவாக்க எய்ம்ஸ் குழு முயற்சி இன்று உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 

ராமநாதபுரம், : நோய் கண்டறிதலில் பாதுகாப்பு குறித்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் மதுரை எய்ம்ஸ் டாக்டர்கள் குழு ஈடுபட்டுள்ளது.சரியான நேரத்தில், சரியான நோயறிதல், சரியான சிகிச்சை அளித்தல் துன்பத்தை தணிப்பது நோயாளிகளின் பாதுகாப்பில் முக்கிய அம்சம். கவனக்குறைவாக நோயறிந்தால் துன்பங்கள் அதிகரிக்கலாம். இது தவறான சிகிச்சை அல்லது பொருத்தமற்ற மருத்துவ பராமரிப்புக்கு வழிவகுக்கும்.சரியான நேரத்தில் நோய்களைக் கண்டறிவது என்பது டாக்டர்களின் அறிவு, அனுபவம், திறன் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகளை பொறுத்தது. பொதுவாக சிகிச்சை அளிப்பவர்களின் கண்டறியும் செயல்பாட்டின் போது பிழைகள் ஏற்படக்கூடும். பெரும்பாலான சமயங்களில் சரியான நேரத்தில் நோய்களை கண்டறிவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை.நோயறிதல், பாதுகாப்பை மேம்படுத்துவது இப்போது முன்னுரிமையாக உள்ளது. ஏனெனில் இது உலகளவில் நோயாளிகளின் பராமரிப்பை பாதிக்கிறது. நோயறிதல் பிழைகள் உலகளாவிய கவலையாக இருந்தாலும் சமீப காலம் வரை நோயறிதல் பாதுகாப்பு சரியான கவனத்தைப் பெறவில்லை.மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர்எம்.ஹனுமந்த ராவ், ஆராய்ச்சி ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் டாக்டர் டி.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தரம் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பிற்கான முயற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.டாக்டர் ரவிக்குமார் உலக சுகாதார நிறுவனத்தின் நோயாளிகள் பாதுகாப்பு பற்றிய பாடத்திட்ட பணிக்குழுவில் பணியாற்றியுள்ளார். நோய் கண்டறியும் பாதுகாப்பு பற்றிய துறையில் பங்களித்துள்ளார். இதில் நவீன தகவல், கற்றல் மற்றும் கற்பித்தல் -ஆய்வுகளும் அடங்கும். டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவச் செயல்பாடுகள் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. மருத்துவப் பராமரிப்புத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு பற்றிய கருத்துக்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களுக்கும் முதல் நாளிலிருந்தே புகுத்தப்பட வேண்டும். இது சம்பந்தமாக ஒவ்வொரு ஒருங்கிணைந்த கற்பித்தல் பிரிவிலும் நோயாளிகளின் பாதுகாப்பு கூறுகளை உருவாக்க நிர்வாக இயக்குனருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். டாக்டர் கணேஷ் பாபு, டாக்டர் சாரா போன்ற பிற துறைத் தலைவர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் இதில் ஈடுபடுத்துவேன். அவர்கள் இந்தப் புதுமையான அணுகுமுறையில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் கூறியதாவது: எய்ம்ஸ் மதுரை இணையதளத்தில் விரிவான பாடத்திட்டம் மற்றும் நோய் கண்டறிதல், பாதுகாப்பிற்கான பயிற்சித் திட்டத்திற்கான கட்டமைப்பைக் காணலாம். இந்தக் கட்டமைப்பானது நோய் கண்டறியும் செயல்முறையை மேம்படுத்துதல், தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் நோயாளி, அவர்களின் குடும்பம், மற்றவர்களை ஈடுபடுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் அணுகுமுறைகளை உள்ளடக்கியது.மேலும் பற்றாக்குறையான வளங்களை (மருத்துவ கருவிகள்) தவறாக பயன்படுத்துதல், அதிகப்படியான பயன்பாடு, குறைவான பயன்பாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்தல் போன்றவை அடங்கும். டாக்டர் டி.எஸ்.ரவிக்குமாரின் நோயாளிகளின் பாதுகாப்பை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் கருத்துக்களை செயல்படுத்தும் இந்த கண்டுபிடிப்பானது நோயாளிகளின் பாதுகாப்பில் மதுரை எய்ம் மருத்துவமனையை முன்னணியில் வைத்திருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ