சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிபுரிய வழக்கறிஞர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு முழுநேர வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு லீகல் எய்டு டிபன்ஸ் கவுன்சில் சிஸ்டம் என்ற இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ளது.ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒரு துணை சட்ட உதவி வழக்கறிஞர், 3 உதவி வழக்கறிஞர்கள், ஒரு அலுவலக உதவியாளர், 2 உதவியாளர்கள் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கான பணியிடங்கள் ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நேர்முகத்தேர்வு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட இணையதள முகவரியான இ-கோர்ட் ramanathapuram.dcourts.gov.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைவர், சட்டப்பணிகள் ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் வழியாக மட்டும் செப்.13 க்குள் விண்ணப்பிக்கலாம்.அதன் பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் குமரகுரு தெரிவித்துள்ளார்.