கல்வித்துறையில் நேரடி உதவியாளர் நியமனத்தை குறைக்க வேண்டும்
பரமக்குடி : -பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பேரவை மற்றும் மாநில பொதுக் குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரேசன் செயல் அறிக்கை, பொருளாளர் சந்திரசேகரன் நிதிநிலை அறிக்கை வாசித்தனர்.பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இளநிலை உதவியாளராக பணியாற்றுவோருக்கு விரைவில் உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கும் வகையில் நேரடி உதவியாளர் நியமனத்தை 25 சதவீதமாக குறைக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை தரம் உயர்த்த வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடிப்படை பணியாளர்களை புதிதாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய மாநில தலைவராக சீனிவாசன், செயலாளராக ஹரி பாஸ்கர், பொருளாளராக அருண்குமார், துணை தலைவராக சு.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய மாவட்ட தலைவராக குமரேசன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் சரவணன், இணை செயலாளர் ஷேக் அப்துல்லா நியமிக்கப்பட்டனர். மாநில தணிக்கையாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்தார்.