தீர்வு காணாத மனுக்கள் விபரம் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தீர்வு காண முடியாத மனுக்களின் நிலைகுறித்து அதிகாரிகள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். இதில் 183 மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் கூறியதாவது:ஒவ்வொரு வாரமும் மக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார். அரசு கலைப் பண்பாட்டுத்துறையின் குரலிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வென்ற 15 பேருக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, கலைபண்பாட்டுத்துறை உதவி அலுவலர் ரமிசா பேகம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.