தேவிபட்டினம் நவபாஷாண பராமரிப்பு பணிகள் நிறைவு
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாண பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வெயில் நேரங்களிலும், பக்தர்கள் நவக்கிரகங்களை தரிசனம் செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நவக்கிரகம் அமைந்துள்ள பகுதி திறந்த நிலையில் இருந்து வந்ததால் வெயில் நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் ரூ.57 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நவக்கிரக நடைமேடை பகுதி முழுவதும் கூரை அமைத்து மங்களூரு ஓடுகள் பதிக்கப்பட்டன.இதனால் பக்தர்கள் நடைமேடை வழியாக வெயில் நேரங்களிலும், எந்தவித சிரமமும் இன்றி சுற்றி வந்து இனி தரிசனம் செய்யலாம்.