மின் கசிவால் 20 வீடுகளில் மின்சாதன பொருள் சேதம்
உச்சிப்புளி : உச்சிப்புளி அருகே இருமேனி கிராமத்தில் உயர் மின்னழுத்தத்தால் 20 வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு உயரழுத்த மின் அழுத்தத்தால் இருமேனி பகுதியில் வீட்டில் உள்ள பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டார், ஏசி, மின் பல்புகள் உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரிக் மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.இதில் தாஹிரா என்பவரின் வீட்டில் அதிகளவு பொருள் சேதம் ஏற்பட்டது. பராமரிப்பு இல்லாததால் இத்தகைய விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இருமேனியைச் சேர்ந்த நவ்வர்ஷா கூறியதாவது: உச்சிப்புளி துணை மின் நிலையத்தில் இருந்து அடிக்கடி உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் விநியோகம் செய்வதால் இது போன்று நடக்கிறது. நேற்று பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் சேதம் அடைந்தது. இது குறித்து உச்சிப்புளி துணை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை வந்து ஆய்வு செய்யவில்லை.எனவே சேதம் அடைந்த பொருட்களுக்கான உரிய நிவாரணத் தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.