| ADDED : ஏப் 09, 2024 12:00 AM
பரமக்குடி : -பரமக்குடி அருகே செயல்படும் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மிளகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் உத்தரகோசமங்கை விலக்கு ரோட்டில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு உத்திரகோசமங்கை, களரி, மேலச்சீத்தை, செய்யாலுார் மற்றும் சத்திரக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டப் பகுதிகளில் விளையும் மிளகாய் வத்தல்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கிலோ மிளகாய் ரூ.240க்கு கொள்முதல் செய்தனர். நேற்று வழக்கம்போல் மிளகாய் விவசாயிகள் கொண்டு சென்றனர். அப்போது கிலோ ரூ.150க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். நியாயமான விலை கிடைக்காததால் ராமநாதபுரம் இருவழிச்சாலையில் முகமதியாபுரம் ரோடு பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார்கள் பரமக்குடி சாந்தி, ராமநாதபுரம் சுவாமிநாதன், பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ராஜா மீண்டும் புதிய ஏலம் விடப்பட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனக் கூறினார்.இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.