புயல் காப்பகத்தில் இயங்கும் கீழமுந்தல் ஊராட்சி நடுநிலைப்பள்ளி; கண்டுகொள்ளாத கல்வித் துறை அதிகாரிகள்
வாலிநோக்கம் : வாலிநோக்கம் ஊராட்சி கீழமுந்தல் அரசு நடுநிலைப்பள்ளி மூன்றாண்டுகளாக புயல் காப்பகத்தில் இயங்கி வருகிறது.வாலிநோக்கம் அருகே கீழமுந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓட்டு கட்டடத்தில் இயங்கி வந்தது. சேதமடைந்த இந்த கட்டடம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 2021 டிச.,ல் ஓட்டு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.அதன் பின் மூன்றாண்டுகளாக கீழமுந்தல் புயல் காப்பகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் 180 பேர் மற்றும் தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து பேர் கட்டடத்தை பள்ளிக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். பா.ஜ., கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:கீழமுந்தல் புயல் காப்பக கட்டடத்தில் 6 முதல் 8 வகுப்பறைகள் நடக்கிறது. இங்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் அவசரத்திற்கு திறந்தவெளியை பயன்படுத்து கின்றனர். அருகிலுள்ள வீடுகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கழிப்பறை தேவைக்கு சென்று வருகின்றனர்.கடலாடி வட்டார கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இடித்து அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பெற்றோர், கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.